ஒரு கிராமத்தில் மழையே இல்லாததால் அந்த கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சம்பிரதாயப்படி அந்த பூஜையின் முடிவில் மழை வர வேண்டுமாம். அந்த கிராம மக்கள் அனைவரும் மழை வரும் என்ற நம்பிக்கையில் அந்த பூஜை நடத்தினார்கள். ஆனால், அந்த பூஜைக்கு வந்த ஒரு குழந்தை மட்டும் கையில் குடையுடன் வந்ததாம்.
இந்த SMS-ல் வந்த குழந்தையைப் போல் எங்கள் குழு பாடல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் திரு. இரத்தினசாமி ஐயா அவர்களுக்கு சால்வை, சந்தனமாலை என்று தயாராக சென்றோம். எங்களுக்கு அவர் பேரில் அவ்வளவு நம்பிக்கை இருந்தது. எந்த ஒரு விஷயத்தையும் நம்புவுதாக இருந்தால் முழுமையாக நம்பிக்கை வைக்கவேண்டும், அறைகுறை நம்பிக்கை எப்போதும் உதவாது.
ஆனால், ஊர் இவரை நாளை சந்தேகப்படக்கூடும் என்ற ஒரு விஷயம்தான் எங்களை கவலைப்படவைத்தது. அதனால், ஊருக்கு இவர் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக நாங்கள் ஒரு யுக்தியை கையாண்டோம்.
அது என்னவென்றால், நாங்கள் திரு. இரத்தினசாமி ஐயாவை சந்திக்க சென்றோம், அன்னதானம் முடிந்தது என்று கூறினோம், மகிழ்ந்தார், மீண்டும் கவியரசரின் ஆன்மாவை அழைக்க கண்களை மூடினார்.

அப்போது, அவரிடம் 'பாடல் பெறுவதற்கு முன் ஒரு சின்ன திருத்தம் செய்ய வேண்டும்' என்று கூறினோம்.
'என்ன?' என்று கேட்டார்.
'எங்களுக்கு நேற்றைய நாயகன் என்ற பாடல் வேண்டாம், அதற்கு பதிலாக இரவின் பயங்கம்' என்ற தலைப்பில் பாடல் வேண்டும்' என்று பாடலின் தலைப்பை மாற்றிக் கூறினோம்.
அவர் மௌனமாக சிரித்தார். கண்டிப்பாக நாங்கள் அவரை சோதித்து பார்க்கிறோம் என்று அவர் யூகித்திருக்க வேண்டும். ஆனால், அது ஊருக்காக, எங்களுக்காக அல்ல என்பதை பலமுறை அவருக்கு உணர்த்த முயன்று(கொண்டு) இருக்கிறோம்.
சிரித்துவிட்டு 'சரி' என்று கூறி கண்களை மூடினார், ஒரு நிமிடம் இருக்கும் பிறகு கண்களை திறந்து தனது பேட்-ஐ எடுத்து சரசரவென்று ஏதோ கிறுக்கினார். ஒரு 2 நிமிடம்தானிருக்கும். முடிந்தது.
அந்த பேப்பரை எங்களிடம் நீட்டினார், எழுத பழகும் ஒரு குழந்தையின் கிறுக்கலைப் போலிருந்தது.
'இதுதான் பாடல்' என்றார்.
நாங்கள் எழுத்துக்கள் புரியவில்லை என்று அவரிடம் கண்களால் சொன்னோம். மீண்டும் அந்த பேப்பரை வாங்கி அவரே படித்துக் காட்ட ஆரம்பித்தார். அதில் கவியரசரின் வாழ்த்துக்கள் இருந்தது. பிறகு பின்வரும் பாடல் இருந்தது.
மெய்யோடு பொய்யாக
ஊர்தூங்கும் நேரம்...
இருளோடு ஒளியிங்கு
போர் செய்யும் காலம்...
கோட்டானும் சாத்தானும்
இரைதேடும் ஜாமம்...
இருந்தாலும் இறந்தாலும்
பொல்லாது ஏமம்...
ஆகாயம் இருள்கொண்டு
நிறம் மாறிப் போகும்..
நிழல்கூட நிஜம் என்று
மனமிங்கு வாடும்..
ஆன்மாக்கள் குடியேற
கூடொன்றைத் தேடும்..
எதைத்தேடி அலைந்தாலும்
ஆட்கொள்ளும் ஏமம்...
இந்த பாடலை அவர் படித்து காட்டியபின் நாங்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் இந்த பாடலை விமர்சிக்க அருகதை அற்றவர்கள் என்று எண்ணி... பாடலை இரசித்தோம்... ஆழ இரசித்தோம்... மழை வந்தது. குடை கொண்டு வந்த எங்களது நம்பிக்கை வீண்போகவில்லை, குடையை விரித்தோம். மாலை சூட்டினோம், சால்வை போர்த்தினோம், ஆராவாரமாக கொண்டாடினோம்.

எங்கள் படத்திற்கு பொக்கிஷமாக கவியரசரின் பாடல் கிடைத்தது எண்ணி நாங்கள் பெருமைப்பட்டுக் கொண்டோம்.
இந்த பாடல்வரிகளை எங்களது பாடல் இசையமைப்பாளர் சதீஷிடம் காட்டிய போது அவர் கூறிய விஷயம் எங்களை மேலும் ஆச்சர்யப்படுத்தியது....
No comments:
Post a Comment