Tuesday, November 11, 2008

பேக்-அப்

கடைசி நாள் இரவு ஷூட்டிங் மிகவும் கோலகலமாக நடந்து கொண்டிருந்தது. அதற்கு காரணம், இன்று இரவு ஷூட்டிங் முடிந்து விட்டால் இந்த பயங்கர வீட்டை விட்டு போய் விடலாம் என்ற ஒரு குட்டி சந்தோஷம் எனக்கு இருந்தது, கண்டிப்பாக இது அனைவருக்கும் இருந்திருக்க வேண்டும்.

எங்கள் ஷூட்டிங் நடப்பதற்கு சற்றே அப்பால் 'வர்ணம்' என்ற திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அந்த திரைப்பட குழுவின் தயாரிப்பு மேற்பார்வையாளர் திரு.ராஜேந்திரன், எங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து எங்களை சந்தித்து பாராட்டி விட்டு சென்றார்... அவர் வார்த்தைகள் எங்களுக்கு பூஸ்ட்டாக இருந்தது. இரு குழுவினரும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டோம்.

விடிந்தது, ஷூட்டிங் முடிந்தது, எல்லா லைட்டுகளையும் கழற்றி, உடமைகள் அனைத்தையும் சரி பார்த்து, கிளம்புவதற்குள் மணி ஒரு 10.00 இருக்கும். அந்த வீட்டிற்கும், நடிகர்களுக்கும் பூசணி உடைத்து, ஒரு குட்டி பூஜை ஒன்று போட்டுவிட்டு கிளம்புவதற்காக அந்த வீட்டை விட்டு வெளியே பேக்-அப் வண்டியிடம் குழுமியிருக்கும்போது, அந்த வீட்டிற்கு அருகே இருந்த டீ எஸ்டேட்டிலிருந்து இருவர் எங்களிடம் பேச்சு கொடுத்தனர்.

'இவ்வளவு நாளா இந்த வீட்லியா ஷூட்டிங் பண்ணிட்டிருந்தீங்க... யாருக்கும் எதுவும் ஆகலியா?' என்று அவர்கள் பேச்சை ஆரம்பித்தது எங்களுக்கு கலவரமாக இருந்தது. ஏன்? என்று கேட்டதற்கு, வழக்கம் போல் அந்த வீட்டில் நடந்த பயங்கர சம்பவங்களை கூற ஆரம்பித்தனர். அவர்கள் கூறக்கூற அவர்கள் கேட்ட கேள்வி எவ்வளவு யதார்த்தமானது என்று தெரிந்தது. உண்மையிலேயே தப்பி பிழைத்துவிட்டோம் என்ற பெருமிதம்தான் இருந்தது. மேலும், அந்த வீட்டிற்கு சற்று அருகில் இருக்கும் குடிசையில் ஒரு பாட்டி இருந்தார், அவரை சந்தித்து விடைபெற்ற போது, அவர் கண்கலங்கி 'இந்த ஏரியாவுக்கு எத்தனையோ வெளியூர்காரங்க வந்துருக்காங்க, நீங்கதான் சல்லியம் இல்லாம நிம்மதியா கிளம்புறீங்க' என்று வாழ்த்தி வழியனுப்பினார்

ஷூட்டிங் முடிந்துவிட்ட சந்தோஷம் இருந்தாலும், மூணாறில் நாங்கள் வாழ்ந்த இடங்கள் (அந்த வீட்டையும் சேர்த்து), பழகிய நண்பர்கள், சாப்பிட்ட ஹோட்டல், லொகேஷன் தேடி தேடி அலைந்த மலைப்பாதைகள், இது எல்லாத்தையும் விட்டு விட்டு வீட்டிற்கு போவதற்கு ஏனோ கஷ்டமாக இருந்தது.

பிரியாவிடை கொடுத்த திரு. நிக்ஸன் வலப்பக்கத்தில் முதலாவதாக நிற்பவர்

ஹோட்டலில் எங்களை உபசரித்த  அழகர்சாமி

வரும்வழியில் பனிமலையில்

அருகில் இருந்த ஓரிரண்டு பேர்களை சந்தித்து விடைபெற்றோம், அவர்களும் எங்களுக்கு பிரியாவிடை கொடுத்தனர். அழுதுகொண்டே பள்ளிக்கு போகும் குழந்தையைப்போல் நாங்கள் மூணாறைவிட்டு சென்னை திரும்பினோம்.

மூணாறிலுள்ள முருகர் கோவில்

பழனியில் இரா டீம்

கிளம்புவதற்கு முன், ஷூட்டிங் வெற்றிகரமாக நடந்தேறியதற்காக மூணாறு முருகன் கோயிலில் ஒரு விசேஷ பூஜை போட்டுவிட்டு, பிள்ளையாருக்கு 108 தேங்காய்களை உடைத்துவிட்டு, வரும் வழியில் பழனியாண்டவரையும் தரிசித்துவிட்டு சென்னை வந்தடைந்தோம்... என்னடா இது! பேய் படம் எடுத்துட்டு இத்தனை கோயில் குளங்களை சுத்திட்டு வர்றீங்களே என்று நீங்கள் நினைக்கலாம்... பேய் படமா இருந்தா என்ன...? செய்யும் தொழிலே தெய்வமில்லியா...!

புழுமிகு சென்னை

மீண்டும் CHENNAI

Wednesday, November 5, 2008

பேய்வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்...

நாகராஜ்அதற்கு அடுத்த நாள் நாங்கள் ஷூட்டிங்கிற்கு வர தயங்கியது உண்மைதான் ஆனால், அன்று இரவு, நாங்கள் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை... ஷூட்டிங் சுமூகமாக நடந்தேறியது.

இதற்கிடையே ஒரு ஜாலியான விஷயமும் அந்த லொகேஷனில் நடந்தது, அது எங்கள் அஸிஸ்டெண்ட் டைரக்டர் நாகராஜின் பிறந்த நாள்.

Birthday Cakeபேய்வீட்டில் பிறந்த நாள் கொண்டாடியது இவர் கண்டிப்பாக தனது வாழ்நாளில் மறக்க முடியாது என்று நினைக்கிறேன். மேலும் எங்களுக்கு நிகழ்ந்த அந்த பயங்கர அனுபவத்தை மறக்கவும் இந்த பிறந்த நாள் வழிவகுத்தது.


Hari with Nagarajநாகராஜைப் பற்றி நாங்கள் சொல்லியே ஆக வேண்டும், அந்தளவுக்கு எங்களை(குழவை) ஒரு தாய் போல் கவனித்து கொண்டார். எங்களில் பலர் நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தால் எங்களை மிரட்டி சாப்பிட வைப்பார். மேலும் இப்படத்திற்காக ரிஸ்க் எடுத்தோர் வரிசையில் இவரும் ஒருவர். அடர்ந்த காடுகளில் மரத்தில் ஏறி எங்களுக்காக லைட் கட்டியது, அந்த வீட்டிற்கு ஷூட்டிங் பர்மிஷன் கிடைக்காமல் நாங்கள் கவலைப்பட்டிருந்த போது எங்களுக்காக மூணாறிலிருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக்கொண்டது(அடுத்த நாளே பர்மிஷன் கிடைத்தது), மேலும் மழையிலும், கடும் குளிரிலும், மலைப்பிரதேசத்தில் வண்டி ஓட்டியது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

தாயுமானவர் பட்டமளிப்பு விழா(சும்மா)

பேக்அப்-இன் போது ஒரு விஷயம் நடந்தது, அதை அடுத்த போஸ்டில் பார்ப்போம்... போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் காரணமாக blog-ஐ அடிக்கடி update செய்ய முடிவதில்லை... முடிந்தவரை சீக்கரம் update செய்து விடுகிறேன்...

Wednesday, October 29, 2008

7வது நாள் இரவு ஷூட்டிங்கில்...

வீட்டிற்குள் ஷூட் எடுத்துக்கொண்டிருந்த இடம்அன்று இரவு படப்பிடிப்பு படபடப்பாக நடந்துக்கொண்டிருந்தது, காட்சிப்படி ஹீரோ, அந்த வீட்டை சுற்றி சில Electro Magnetic Field அளவுகள் எடுக்க வேண்டும். அதற்காக சிலர் வீட்டிற்குள்ளேயும் பலர் வீட்டிற்கு வெளியேயும் ஃபீல்டில் இல்லாதவாறு நின்றுகொண்டிருந்தோம். ஷாட் முடிந்ததும் சதீஷ்(கேமராமேன்) வாக்கிடாக்கியில் சிக்னல் கொடுப்பார்

நானும்(ஹரீஷ் நாராயண்) கிருஷ்ண சேகர் சாரும் வெளியே வாக்கி டாக்கியுடன் வெயிட் செய்து கொண்டிருந்தோம். ஆனால் வெகு நேரம் ஆகியும் எந்த ஓரு மெஸேஜும் வராததால், நாங்கள் உள்ளே சென்று என்ன என்று பார்த்தால், அனைவரும் ஒருவரையொருவர் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். காரணம், அந்த வீட்டில் மாடியிலிருந்து ஏதோ ஒரு விநோத சத்தம் கேட்டது என்று சதீஷ் கூறினார். வீட்டிற்குள்ளிருந்த ஹரி(இன்னொரு டைரக்டர்), ஸ்ரீஜித் (அஸோஸியேட்), லோகேஷ்(அஸிஸ்டெண்ட்) அனைவரும் அவர்களுக்கும் அந்த சத்தம் கேட்டதாக ஒப்புக்கொண்டணர்.

வீட்டிற்குள்இவர்கள் முகத்திலிருந்த மிரட்சியைப் பார்த்த எங்களுக்குள்ளும் ஒருவித பய உணர்வு ஊடுருவியது. மணி 12:30, வெகு நேரம் வரை செய்வதறியாது திணறிக்கொண்டிருந்தோம். முதல் வேலையாக வீட்டை விட்டு வெளியே வந்தோம். எங்களில் யார் யாருக்கு பேய் பயம் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது, ஆனால் அந்த தருணம் மட்டும் எங்கள் அனைவருக்கும் பயம் இருந்தது உண்மைதான், யாரும்(எங்கள் குழுவில்) 'நான் பயப்படவில்லை' என்று மறுக்க முடியாது.

அப்போதைக்கு எங்களுக்கு தெரிந்த ஒரே யோசனை, அங்கு வீட்டிற்கு வெளியில் நின்றிருந்த TAVERA வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொண்டோம். அன்றைக்கு ஷூட்டிங் Cancel செய்துவிட்டு, நடந்தவற்றை மறப்பதற்காக சில ஜோக்ஸ் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டு சிரித்து(?) கொண்டோம். அந்த நேரத்திற்கு அந்த Laughter Therapy நன்றாக வேலை செய்தது. ஆனாலும் வண்டிக்குள்ளிருந்து ஒருவருக்கொருவர் தெரியாமல் அந்த வீட்டை ஓரப்பார்வையில் பார்த்துக் கொண்டிருந்ததை என்னால் கவனிக்க முடிந்தது.

Friday, October 24, 2008

இரவில் மட்டும் ஷூட்டிங்...

இருட்டிலேயே பூஜை
இந்த படத்திலேயே கொடுமையான விஷயம் என்னவென்றால், பெரும்பாலான காட்சிகள் இரவில் அமைந்ததுதான். அது கூட பரவாயில்லை, அந்த காட்சிகளும் எந்த நேரத்தில் நடைபெறுகிறதோ, அதே நேரத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருந்தோம் (இது டிஸ்கஷினிலேயே நாங்கள் எங்களுக்குள் செய்துகொண்ட உறுதிமொழி).

இது இப்படியிருக்க முதல் நாள் நாங்கள் லொகேஷனில் கால் வைத்த போது அங்கு கும்மிருட்டு, அப்போதுதான் தெரிந்தது, அந்த வீட்டில் கரண்ட் கனேக்ஷன் என்ற ஒன்று அறுந்துபோய் 2 வருடங்களானதாம். இருட்டிலேயே பூஜை போட்டு ஷூட்டிங் ஆரம்பித்தோம்.

'சரி நாளைக்கு ஜெனரேட்டர் ரெடி பண்ணிட்டு ஷூட்டிங் வச்சிக்கலாமா?' என்று புரொட்யூசரிடம் சொன்னால், அவரோ இன்று இரவு ஷூட்டிங் ஆரம்பித்தே தீர வேண்டும் என்று கூறிவிட்டார். எப்படி என்று எங்கள் ஷெட்யூலில் தேடியபோது, தீப்பந்த வெளிச்சத்தில் எடுக்கவேண்டிய ஒரு காட்சி மாட்டியது. சரி எடுத்து விடலாம் என்று தீப்பந்தத்தோடு தயாரானோம்.

தீப்பந்த காட்சிகதைப்படி நள்ளிரவு 12 - 12.30க்குள் நடக்கவேண்டிய காட்சி, நாங்கள் 12 மணிக்கு முதல் நாள்(இரவு) ஷூட்டிங் ஆரம்பித்தோம்.

'எனக்கொன்னும் பயமில்லை...' என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டிருந்தார்களே தவிர, எல்லோருக்குள்ளும் ஒரு மிரட்சி இருந்துக்கொண்டுதான் இருந்தது. ஒருவழியாக அந்தக்காட்சியை 2 மணி நேரத்தில் எடுத்து முடித்துவிட்டோம் (நல்ல வேளை சின்ன ஸீன்)...

அடுத்த நாள், அந்த வீட்டிற்குள் நுழைவதர்குள் எல்லா லைட்ஸூம் ரெடியா இருக்கணும் என்று புரொட்யூஸர் கடுமையாக உத்தரவிட்டுவிட்டுத்தான் தூங்கச் சென்றார். 25 கி.மி தொலைவிலிருக்கும் அடிமாலி என்ற இடத்திலிருந்து ஜெனரேட்டரை வரவழைத்தோம். நல்லவேளையாக அடுத்த நாளிலிருந்து அந்த வீட்டில் ஓரளவு வெளிச்சம் இருந்தது, காட்சியின் நேரத்தைக் கணக்கிட்டு விடுவிடுவென ஷூட்டிங்கை முடித்துக்கொண்டிருந்தோம்.

கோபால், என்ற ஒரு சேட்டன், ஜெனரேட்டரையும், மற்ற பொருட்களையும் பார்த்துக்கொள்வார், அவர் 4வது நாள்(இரவு) ஷூட்டிங்கில் எங்களுடன் சண்டைக்கு வந்தார், ஏனென்று கேட்டதற்கு காவலுக்காக என்னைப் பகலில்(?) எல்லோரும் தனியாக விட்டுவிட்டு போகிறீர்கள், எனக்கு பயமாக இருக்கிறது என்றார். அவரை ஒருவழியாக பேசி சமாளித்து, ஜெய்குமார் என்ற கேமரா அஸிஸ்டெண்ட் ஒருவரை, அவருக்கு(சேட்டனுக்கு) துணையாக இருக்கச் சொல்லி பஞ்சாயத்திற்கு தீர்ப்பு வழங்கினோம்.

ஜெய்குமார் - Camera Asst
இப்படிப் பல (மெகா)கதைகள் ஒவ்வொரு இரவும் நடந்து கொண்டிருந்தாலும், ஒரு வழியாக ஷூட்டிங் எந்த பிரச்சினையும் இல்லாமல் 7வது நாள் வரை போய்க்கொண்டிருந்தது, 7வது நாளிரவு மட்டும் ஒரு பிரச்சினை....

Wednesday, October 22, 2008

இதோ அந்த பயங்கர வீடு...

மறுநாளிலிருந்தே லொகேஷன் வேட்டை நடத்த ஆரம்பித்தோம். முதலில் டோனி என்ற ஒருவர் லொகேஷன் மேனேஜராக வந்தார்... அவரிடம் ஆவி, பேய்கள் இருப்பதாக நம்பப்படும் இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள் என்றதும், மனிதன் குழம்பிப்போய்விட்டார். பாவம் எங்களுக்காக அவரும் அரும்பாடு பட்டு சில பல பழைய இடங்களை காட்டிக் கொண்டிருந்தார்... இப்படியே 2 நாட்கள் கழிந்தன, ஆனால் பயங்கரமான இடங்களாக எதுவும் மாட்டவில்லை... ஒரு கட்டத்தில் அவர் பின்வாங்கிக் கொள்ளவே, நிக்ஸன் என்றவர் தனக்கு தெரிந்த சில இடங்களை காட்டுவதாக கூறி எங்களை அழைத்து சென்றார்... இருந்தும் நாங்கள் பார்த்த சில இடங்களின் சலிப்புகள் காரணமாக பெரிதாய் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் அவருடன் சென்றோம்...
போதமேடு என்ற பகுதியில் அவர் காட்டிய முதல் இடமே நாங்கள் கதைக்காக எதிர்ப்பார்த்தது போலவே இருந்தது. ஆனால் நிகஸன், அந்த இடத்தில் உண்மையிலேயே சில அமானுஷ்யங்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புவதாக கூறினார். ஆஹா! இதுதானே நாங்கள் எதிர்ப்பார்த்து என்று கூறி, அந்த இடத்தை முடிவு செய்தோம். ஆனால் அந்த இடம் அவ்வளவு சுலபத்தில் கிடைக்கவில்லை, அதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறவே, நாங்கள் ஒரு 4 நாட்கள் அந்த இடத்தில் ஷூட்டிங் பர்மிஷனுக்காக காத்திருந்தோம்...
இதற்கிடையே நிக்ஸன் அவர்கள் எங்களுக்கு வெவ்வேறு இடத்தை காட்டிக் கொண்டேடடட இருந்தார்... Dayக்கள் நகர்ந்ததுதான் மிச்சம், ம்... ஹூம்...எதுவும் எங்களுக்கு பிடிக்கவில்லை... 'மணந்தால் மஹாதேவி.. இல்லையேல் மரணதேவி' என்ற கதையாய், மிகவும் பிடிவாதமாக இருந்து அந்த இடத்திற்கான ஷூட்டிங் அனுமதியை ஒருவாறு பெற்றுக்கொண்டோம்.
தயாரிப்பாளர் முகத்திலும் எங்கள் அனைவர் முகத்திலும் இப்போதுதான் நிம்மதி.
ஆனால் அதே முகத்தில் சற்றே கலவரமும் கலந்திருந்தது, காரணம் நாங்கள் ஷூட் செய்யவேண்டிய காட்சிகள் அனைத்தும் இரவு நேரங்களில் படம்பிடிக்க படவேண்டியவை. ஆனால் அந்த வீட்டை பாரத்தால் பகலிலேயே பயங்கரமாக இருந்தது. இது போதாதென்று அப்பகுதியில் ஒரு சில மனிதர்களும், 'இங்கேயா படம் எடுக்கிறீங்க' என்று அந்த வீட்டைப் பற்றி பலப்பல கதைகள் கூறி எங்கள் பீதி(தீ)க்கு பெட்ரோல் ஊற்றிக்கொண்டே இருந்தனர்.
'கிளம்பிட்டோம், வந்துட்டோம், எடுத்துட்டுதான் போனோம்' என்ற உறுதிமொழியை எங்கள் குழுவில் அனைவரும் எடுத்துக் கொண்டு முதல் நாள் மாலை 6 மணிக்கு, லொகேஷனில் (அந்த வீட்டில்) கால் பதித்தோம்.

Sunday, October 19, 2008

ஜூலை 2ஆம் தேதி - மூணாறு பயணம்....

'இரா' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புக்காக ஜூலை 2 ஆம் தேதி எங்கள் குழு, மூணாறு கிளம்பியது. வழியில் கரூரில் அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் உபயோகிக்கும் சில பிரத்யேகமான எலக்ட்ரானிக் சாதனங்களை ஆர்டர் செய்திருந்தோம், அதை வாங்கிக்கொண்டு மூணாறு போவதாக ப்ளான். ஆனால் கரூரில் கொஞ்சம் லேட் ஆகிவிட்டதால் (ஆனால் சாதனங்கள் கிடைத்துவிட்டது) நாங்கள் மூணாறு சென்றடைய நள்ளிரவு ஆகிவிட்டது. நல்லவேளையாக நாங்கள் சென்னையிலிருந்தே ரூமை புக் செய்திருந்ததால் சிரமம் எதுவுமில்லாமல் சென்றதும் ரெஸ்ட் எடுத்துக் கொண்டோம்

Tuesday, September 30, 2008

இரா உருவான கதை

ஜூன் 6ஆம் தேதி எங்கள் குழு வேலூரில் ஹரி வீட்டு கிரஹப்பிரவேசத்திற்காக சென்றிருந்தோம். அன்றுதான் தசாவதாரம் ரிலீஸ். சென்னைக்கு வரும் வரை பொறுமையில்லை அதனால் அங்கேயே Adlabs Lakshmi Theatreல் அரும்பாடுபட்டு படம் பார்த்துவிட்டு சென்னைக்கு

திரும்பியிருந்தோம். மறுநாள் கம்ப்ளீட் ரெஸ்ட். அதற்கு அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை ஹரியை நான் (ஹரீஷ்) அவரது எடிட்டிங் ஸ்டூடியோவில் சந்திக்க சென்றிருந்தேன். அப்போது நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கும்போது, View-Pointல் ஒரு படம் செய்தால் எப்படியிருக்கும் என்பதை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதுவும் அது ஒரு பேய் வீட்டில் தன்னந்தனியாக ஒரு video game effectல் செய்யும்போது பார்ப்பவர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பற்றி எதேச்சையாக பேசப்போக தோன்றிய கதைதான் இரா... அட! இது நல்லாயிருக்கே என்று சொன்ன ஹரி இதை நானே தயாரிக்கிறேன் என்று கூற, நான் கேட்டது 'நெசம்மாத்தான் சொல்றீங்களா ஹரி?' என்று (அப்பாவியாக 'கற்றது தமிழ்' ஹீரோயின் தொணியில்) கேட்டது இன்னிக்கும் மறக்க முடியாது.



எங்கள் கேமராமேன் சதீஷ் - கமல் ரசிகர்

மறுநாள் காலையில் ஹரிக்கு ஃபோன் செய்து ஒரு கன்ஃபர்மேஷனும் செய்துக்கொண்டேன்.... சரி, இவரு சீரியஸாதான் சொல்றாரு என்று தெரிந்து கொண்ட பின் குழுவைக்கூட்டினோம். அதாங்க Meeting...சேகர் சாரும் வந்து சேர்ந்தார்... என்னை மாதிரியே அவரும் ஆச்சர்யப்பட்டு அங்கே மறுபடியும் ஒரு 'நெஜமாத்தான் சொல்றியா' எனும் குரல் கேட்டது.


அடுத்ததாக எங்கள் குழுவின் மூன்றாவது கண்(அதாங்க கேமராமேன்) அவரிடம் விஷயத்தை கூறினோம், சற்றே வெட்கப்பட்டார், கோவப்பட்டார்... ஏன்னா அவருதான் இந்தப் படத்துல ஹீரோ... பெரிய கேமராமேனா வரணும்ங்கிற லட்சியத்துல இருக்கிற ஒருத்தரை கூப்பிட்டு நீங்கதான் ஹீரோன்னா டென்ஷன் ஆவாரா மாட்டாரா...?
ஒருவழியா ப்ராஜெக்ட் மேக்கிங் புதுசா இருக்குன்னு சொல்லி அவரை சம்மதிக்க வச்சோம்....


ஜூன் 18, 2008 புதன்கிழமை, கொளத்தூர் அகத்தீஸ்ரர் கோயிலில் பூஜை போட்டு படவேலைகளை துவக்கினோம். மறுநாளிலிருந்து மும்முரமாக கதை விவாதம் தொடங்கியது, ஸ்கிரிப்ட் முடிக்க 12 நாட்களானது. முதல் கட்ட படப்பிடிப்பிற்காக நாங்கள் ஜூலை 2ஆம் தேதி 7 மணிக்கு அலுவலக பூஜை போட்டுவிட்டு மூணாறு கிளம்பினோம்.

இரா என்றால் என்ன?

முதலில் இந்த படத்திற்கு நாங்கள் 'ஓர் இரவு' என்ற தலைப்பையே வைத்திருந்தோம். ஆனால் அந்த தலைப்பு 1951 ஏ.வி.எம் தயாரிப்பில் அண்ணாவின் கைவண்ணத்தில் திரைப்படமாக வெளிவந்தது. ஆகையால் எங்களுக்கு இந்த தலைப்பு கிடைப்பதில் சில தாமதங்கள்(சிரமங்கள்) ஏற்பட்டது. சரி, முதல் படம், எதற்கு பிரச்சினை என்ற எண்ணத்தில், நாங்கள் இதற்கு வேறு தலைப்பை தேட முடிவெடுத்தோம். ஆனால் ஓர் இரவு அளவிற்கு வேறோரு தலைப்பு கிடைப்பதாயில்லை... கடைசியில் சிகாகோவின் வலைதள அகராதி (http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.1:1:603.tamillex) ஒன்றை அலசிக்கொண்டிருக்கும்போது கிடைத்த தலைப்புதான் இரா... இரா என்றால் இரவுதான்... (இராப்பாடகன், இராப்பனிக்காலம், இராப்பிச்சை என்ற வார்த்தையில் இருப்பது போல்)
ஒருவழியாக, இந்த தலைப்பு கிடைப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருந்தது.

அன்புள்ள வலைநண்பர்களுக்கு,

இந்த வலைப்பதிவின்மூலம் உங்களை சந்திப்பதில் நாங்கள் (ஹரிஷங்கர், ஹரீஷ் நாராயண், கிருஷ்ண சேகர்) பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்தப்படத்தைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் தற்போதைய நிலவரங்களையும் உங்களுக்கு தெரிவிப்பதோடு, உங்களது மேலான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வாய்ப்பை இந்த வலைப்பதிவு தரும் என்ற நம்பிக்கையுடன் இதோ எங்கள் முதல் பதிப்பு....