வரிகள் ஆழமாகவும் இறந்தவன் நிலையை தெளிவாக விளக்கும் விதமாகவும் இருக்க வேண்டும் என்றும் நாங்கள் எதிர்ப்பார்திருந்தோம். அப்போது ஒரு அறிமுக பாடலாசிரியர் (பெயர் குறிப்பிடவிரும்பவில்லை) 'இதுக்கு மேலயும் வரிகள் வேணும்னா நான் இறந்துபாத்துதான் எழுதணும்' என்று கூறி சென்றுவிட்டார். அவர் சென்றதும் நாங்கள் புலம்பிக் கொண்டிருந்தோம். அந்த பாடலாசிரியர கோபமாக பேசியது நியாயமோ, நம்மீதுதான் தவறு உள்ளதோ, அதிகமாக எதிர்பார்க்கிறோமோ என்று புலம்பிக்கொண்டிருந்தோம். அப்போது கேமிராமேன் சதீஷ் ஒரு பயங்கர ஐடியா கொடுத்தார், அந்த பாடலாசிரியர் இறந்து பார்த்து பாடல் எழுதவேண்டாம், அதற்கு பதிலாக திரு. இரத்தினசாமி ஐயாவிடம் சென்று இறந்து போன ஒரு கவிஞரின் ஆன்மாவை அழைத்து பாடல் எழுத வைப்போம் என்று கூறினார். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். எனக்குள் இது ரொம்ப நல்ல ஐடியா என்றும் இதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டுமே என்று இருந்தது. நான் நினைத்தது சரிதான், அனைவரும் சதீஷுக்கு கை கொடுக்க ஆரம்பித்தனர். நல்ல ஐடியா என்று பாராட்டினர்.
சரி என்று அடுத்த நாளே திரு. இரத்தினசாமி ஐயாவிடம் சென்றோம். கேமிரா சகிதம் அவரை சந்தித்து விஷயத்தை கூறினோம். அவர் நினைத்திருப்பார், 'இவங்க என்னடா ஆ..ஊ..ன்னா கேமிராவை தூக்கிட்டு வந்துடுறாங்க..' என்றும் எண்ணியிருக்கக் கூடும். ஆனால் விஷயத்தை கூறியதும், அவர் சர்வ சாதாரணமாக, அவ்வளவுதானே நல்ல விஷயம்தான் பண்ணிடலாம் என்றார். எந்த கவிஞருடைய ஆன்மாவை அழைக்கவேண்டும் என்று அவர் கேட்டதற்கு, கவியரசரின் ஆன்மாவை அழைத்து பாடலெழுதிக் கேட்க வேண்டும் என்று கூறினோம். சரி செய்துவிடலாம் என்று கூறிய அவர் என்ன பாடல் வேண்டும் என்று கேட்டார், நாங்கள் பாடலின் தலைப்பான நேற்றைய நாயகன் என்று கூறி அவரிடம் பாடல் எவ்வித்ததில் இருத்தல் வேண்டும் என்று விளக்கினோம். அவர் பாடல் பெற்றுத்தருவதாக சம்மதித்தார். மேலும் அவர், 'நான் சம்மதிப்பது பெரிதல்ல, அதற்கு கவியரசரின் ஆன்மா சம்மதிக்க வேண்டும்' என்று கூறினார். இது எங்களை சற்றே கலவரப்படுத்தியது. ஒருவேளை அவரது ஆன்மா பாடல் எழுதிக் கொடுக்க மறுத்து விடுமோ என்று பயந்தோம்.

அவர் தனது பேட்-ஐ எடுத்து ஆட்டோரைட்டிங் முறையில் தனது வழிகாட்டும் குரு ஆவியை அழைத்து விஷயத்தை கூறினார், அதன்பிறகு தனது பேடில் ஏதேதோ எழுத்துக்களை கிறுக்கினார், பிறகு அதை படித்துப் பார்த்துவிட்டு எங்களிடம், 'கவிஞர் சன்மானம் கேட்கிறார்' என்று கூறினார்.
எங்களுக்குள் என்னென்னவோ தோன்றியது, அதெப்படி இறந்துபோனவர் சன்மானம் கேட்க முடியும் என்று ஏதேதோ எண்ணங்கள்.
பிறகு அவர் அந்த கிறுக்கல்களை எங்களுக்கு படித்துக் காட்டினார்.
அதில் 'இளம் தலைமுறையினரே... கலை ஆர்வலர்களே... வாழ்த்துகிறேன் உங்களை...' என்று சில விஷயங்கள் இருந்தது. அதன்படி கவியரசரின் ஆன்மா எங்களிடம் சன்மானம் வாங்காமல் பாட்டு எழுதி கொடுப்பதில்லை என்றும், சன்மானம் என்னவென்றால், உடலால் இயலாத ஏழு உடல் ஊனமுற்றோர்களுக்கு அன்னதானம் செய்துவிட்டு மீண்டும் வந்து என்னை சந்திக்க நான் பாடல் எழுதிக்கொடுப்பேன் என்று கூறியிருப்பதாக அந்த வரிகள் இருந்தது.
இது நல்ல விஷயம்தானே என்று எண்ணி நாங்கள் அதை உடனடியாக நிறைவேற்றிவிட்டு வருகிறோம் என்று கிளம்பினோம். அடுத்த நாளே நிறைவேற்றிவிட்டோம். இதற்குள் இந்த விஷயம் எங்கள் அஸிஸ்டெண்டுகள் மத்தியில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, இதெல்லாம் நடக்கிற காரியமில்லை என்றும் அந்த ஆவியுலக ஆராய்ச்சியாளர் உங்களை ஏமாற்றுகிறார் என்றும், பாடலை எழுத அவகாசம் தேடிக்கொள்ளவே இப்படி அன்னதானம் அது இது என்று கூறியிருக்கிறார் என்றும் அவர் இரவோடு இரவாக ஒரு பாடலை நேற்றைய நாயகன் என்ற தலைப்பில் எழுதி மனப்பாடம் செய்து கொண்டு மறுநாள் கவியரசரின் ஆன்மா எழுதியது போல் எழுதிக்கொடுக்க போகிறார் என்று ஆளாளுக்கு ஒருவிதமாக பேசிக்கொண்டிருந்தனர்.
இந்த ஐயம் உண்மையில் நாளை அனைவருக்கும் வரக்கூடும். இதை சரிபார்த்துக்கொள்ள நாங்கள் ஒரு யுக்தியை கையாண்டோம்.
அது...
No comments:
Post a Comment